Tuesday, April 19, 2011

கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று மீண்டும் ஆரம்பம்…

காலவரையறையின்றி மூடப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் விரிவுரைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி பிரேமகுமார் தெரிவித்தார். வந்தாறுமூலை வளாகத்தில் அமைக்கப்பட்டிரு க்கும் பொலிஸ் காவலரணை நீக்குமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்தது. இந்த நிலையில் விரிவுரைகளை இன்று முதல் ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும், அனைத்து மாணவர்களையும் விரிவுரைகளுக்குச் சமுகமளிக்குமாறு அறிவித்திருப்பதாகவும் பதில் உபவேந்தர் தெரிவித்தார். பொலிஸ் காவலரணை அகற்றுவது தொடர்பாக பொலிஸ் தரப்பினருடனும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் எனினும், பொலிஸ் காவலரணை அகற்றாமல் கடமையிலிருக்கும் பொலிஸாரைத் தேவையேற்படும் பட்சத்தில் மாற்றமுடியமென்று தமக்குப் பதில் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். விடுதிகளிலுள்ள மாணவர்கள் நேற்று மாலைக்குள் விடுதி திரும்ப வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த கலாநிதி பிரேமகுமார் இன்று முதல் விரிவுரைகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.

அரச முகாமைத்துவ இணைந்த சேவை மேலும் 2700 பேரை நியமிக்க அரசு நடவடிக்கை……

அரச முகாமைத்துவ இணைந்த சேவைக்கு மேலும் 2700 பேரை விரைவில் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் நிலவும் ஐயாயிரம் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் அண்மையில் 2330 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேலும் 2700 வெற் றிடங்களுக்கும் நியமனங்களை துரிதமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்படி அமைச்சு மேற்கொண்டுள்ளது. திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்தே அண்மையில் 2330 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவோரிலிருந்தும் அடுத்த கட்ட நியமனங்கள் வழங்கப்படு மென அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட் சையின் பெறுபேறுகள் இதுவரை பொது நிர்வாக உள்நாட்டலு வல்கள் அமைச்சுக்குக் கிடைக்கவில்லை எனவும் பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து அந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றதும் மீதமுள்ள வெற் றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாகவே நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச முகாமைத்துவம் இணைந்த சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைகள் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடை பெற்றன. பல்லாயிரக் கணக்கானோர் இப்பரீட்சைகளில் தோற்றினர். திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குக் கொழும்பில் நேர்முகப் பரீட்சைகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் 2330 பேர் தகுதியானவர்களென தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டன. கடந்த மாதங்களில் நாடளாவிய ரீதி யில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நேர்முகப் பரீட்சைக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் அவர்களுக்கு உரிய காலத்தில் கிடைத்திருக்கவில்லை. இத்தகைய காரணங்களினால் விடுபட்ட சுமார் 700 பேருக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன. இவர்களை கொழும்புக்கு அழைத்து நேர்முகப் பரீட்சை நடத்தப்படுமெனவும் அதன் பின்னர் தகுதியானோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அரச முகா மைத்துவ இணைந்த சேவையில் நிய மனங்கள் வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Saturday, April 16, 2011

புத்தாண்டு கால விபத்துகள், வன்முறைகள் 18 பேர் பலி 600 பேர் காயம் மது, போதைப்பொருள் பாவனை மற்றும் பட்டாசு வெடி விபத்துகள் குறைவு…..

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களின் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர். இவ் விபத்துக்களின் போது உயிரிழந்திருப்பவர்களில் நால்வர் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் என்றும், ஐவர் இளைஞர்கள் என்றும் ஏனையவர்கள் நடுத்தர மற்றும் முதுமை வயதை உடையவர்கள் என்றும் பொலிஸார் கூறினர். வாகன விபத்துக்கள், கத்திக்குத்து, கங்கைகளில் நீராடிய போது ஏற்பட்ட விபத்து மற்றும் உமா ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் விபத்து என்பன காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒன்பது பேரும், நண்பர்கள் உறவினர்களோடு கங்கைகளில் நீராடிய ஐவரும், உமா ஓயா நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் காட்டுக்குச் சென்று விறகு சேகரித்துக் கொண்டு வீடு திரும்பிய மூன்று சிறுமிகளுமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்கள் கூறினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் சிலருடன் குடிபோதையில் இளைஞர் ஒருவர் சக நண்பர்களினால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 570 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கொழும்பு பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு நேற்று தெரிவித்தது. இதில் 411 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 159 பேர் தங்கி சிகிச்சை பெறுவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

Thursday, April 14, 2011

அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது பிரதியமைச்சர் முரளிதரன்.......

தமது பெயரில் அமெரிக்க இராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ள மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குரிய ஆதாரத்தை முடிந்தால் வெளியிடுமாறும் அமெரிக்காவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…அண்மையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தம் பெயரை களங்கப்படுத்தும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். போராட்டத்தில் இருந்து ஆயுத வன்முறையினால் எதுவும் சாதிக்கமுடியாது என்பதையுணர்ந்து ஜனநாயக வழிக்கு திரும்பி அதன் மீது நம்பிக்கைகொண்டு அரசியலில் பிரவேசித்து இன்று இந்த நாட்டின் மாபெரும் அரசியல் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராகவும் பிரதியமைச்சர்களில் ஒருவராகவும் உள்ளேன். இவ்வாறான நிலையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை எம்மை கடும் கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன் எனது நற்பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை உண்டுபண்ணுபவையாகவும் உள்ளது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் எதுவித அசம்பாவிதங்களும் அற்ற நிலையில் மக்கள் மிகவும் ஒரு சந்தோஷமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதை அங்கு சென்றுவரும் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதில் நான் மிகவும் விழிப்புடன் செயற்பட்டுவருகின்றேன். கடந்த காலத்தில் எமது மாகாணத்தில் இடம்பெற்றுவந்த கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை நிறுத்துவதற்கு கடும் நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் உத்தரவு விடுத்த நிலையில் இன்று அந்த மக்கள் எதுவித அசம்பாவிதங்களும் இன்றி நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர். இவ்வாறான நிலையில் எதுவித ஆதாரமும் இன்றி இவ்வாறு உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரின் பெயருக்கு எதுவித ஆதாரமும் இன்றி களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவதை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நிறுத்தவேண்டும் என கோரிக்கைவிடுக்கின்றேன். அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் நாங்கள் எதுவித விமர்சனமும் செய்யாத நிலையில் எமது நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது பொய்யான தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் அமெரிக்கா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் என் தொடர்பான எதுவித தகவலும் இல்லையென்பதையும் கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பாடுமீன்கள் இணையத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

பிறக்கும் புதுவருடம் உலக
மக்கள் அணைவரும்
அமைதியும் சந்தோசத்துடனும்
இனிதே இன்புற்றிருக்க இனிய
வாழ்த்துக்கள் பாடுமீன்கள்

Wednesday, April 13, 2011

மலரும் புத்தாண்டில் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வோம்.....

பண்டைய காலம் முதல் இலங்கை யின் பெரும்பான்மையான மக்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு ஒரு மிகப்பெரும் கலாசாரப் பண்டிகையாகும். இப்பண்டிகை பூவுலகிற்கும் மக்களுக்கும் சக்தியை வழங்கும் சூரியனை வழிபடுவதற்கான ஒரு பெருநாள் என்பதோடு, நாட்டின் கிராமிய மக்களின் விவசாயப் பொருளாதார அடைவுகளுக்கு மேலும் வளம் சேர்க்கும் ஒரு வருடாந்த பெருவிழாவாகும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளதாவது, விவசாயத்துறை உட்பட ஏனைய எல்லா துறைகளிலும் உற்பத்தி துரித வளர்ச்சி கண்டுவரும் ஒரு காலகட்டத்திலேயே நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின்றோம். மேலும் எல்லா மக்களும் எமது தாய்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் நன்மைகளை அனுபவிக்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இப்புத்தாண்டைக் கொண்டாடுகின் றோம். எனவே, இப்புத்தாண்டு எமது மக்களிடம் எதிர்கால முன்னேற்றம் குறித்த புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டுவர உதவும். பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் இப்புத்தாண்டின் பாரம்பரியங்கள் இக் கொண்டாட்டத்திற்கு மேலும் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் சேர்ப்பதாகவுள்ளது. எமது ¡ழ்க்கை ஒழுங்கில் இப்பெருநாளின் முக்கியத் துவத்தை எமது பிள்ளைகளுக்கும் உணர்த்துவதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினரான அவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை வழங்க முடியும். இப்புத்தாண்டோடு தொடர்புடைய பல்வேறு சமயச் சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களில் எமது பிள்ளைகள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எனவே இப்புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் எமது பிள்ளைகளின் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் பண்டிகைக் காலங்களில் சகல வகையான மதுபானங்களிலிருந்தும் தூரவிலகியிருக்குமாறு நான் உங்கள் எல்லோரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இது இப்பெருநாள் தினத்தின் மகிழ்ச்சியை எமது நாட்டின் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் முழுமையாகக் கிடைக்கச் செய்வதில் பெரும் பங்களிக்கும் என்பது எனது நம்பிக்கையாகும். நாட்டினதும் மக்களினதும் பாதுகாப் புக்காக புதுவருட காலத்தில் சேவை யில் ஈடுபட்டிருக்கின்ற முப்படை யினருக்கும் பொலிஸாருக்கும் ஏனைய கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.