Saturday, April 16, 2011

புத்தாண்டு கால விபத்துகள், வன்முறைகள் 18 பேர் பலி 600 பேர் காயம் மது, போதைப்பொருள் பாவனை மற்றும் பட்டாசு வெடி விபத்துகள் குறைவு…..

தமிழ் – சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களின் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர். இவ் விபத்துக்களின் போது உயிரிழந்திருப்பவர்களில் நால்வர் 12 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் என்றும், ஐவர் இளைஞர்கள் என்றும் ஏனையவர்கள் நடுத்தர மற்றும் முதுமை வயதை உடையவர்கள் என்றும் பொலிஸார் கூறினர். வாகன விபத்துக்கள், கத்திக்குத்து, கங்கைகளில் நீராடிய போது ஏற்பட்ட விபத்து மற்றும் உமா ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால் விபத்து என்பன காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒன்பது பேரும், நண்பர்கள் உறவினர்களோடு கங்கைகளில் நீராடிய ஐவரும், உமா ஓயா நீர் மட்டம் திடீரென உயர்ந்ததால் காட்டுக்குச் சென்று விறகு சேகரித்துக் கொண்டு வீடு திரும்பிய மூன்று சிறுமிகளுமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்கள் கூறினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் சிலருடன் குடிபோதையில் இளைஞர் ஒருவர் சக நண்பர்களினால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் பண்டிகைக் காலத்தில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக 570 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கொழும்பு பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு நேற்று தெரிவித்தது. இதில் 411 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். 159 பேர் தங்கி சிகிச்சை பெறுவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின.

No comments: